டில்லி
இந்தியாவில் தற்போது கொரோனா சோதனை அடியோடு மாற்றப்பட்டு சோதனை வளையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல உலக நாடுகளில் அதிக அளவில் பரவி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் பரவுதலும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சோதனை மிகவும் குறைந்த அளவில் நடப்பதால் பாதிப்படைந்தோர் அனைவரையும் கண்டுபிடிக்க முடியாததால் அவர்கள் மூலம் அதிக அளவில் பரவுதல் ஆகும். உதாரணமாக நிஜாமுதினில் நடந்த மாநாட்டுக்கு வந்தவர்கள் முழுமையாகச் சோதிக்கப்படாததைச் சொல்லலாம்.
கடந்த 20 நாட்களாக ஐந்து வகையினர் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சென்ற இரு வாரங்களில் வெளிநாடு சென்று வந்தோர், தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தோர், நோயாளிகளைக் கவனிக்கும் சுகாதார ஊழியர்கள், நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தோர் மற்றும் கடும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் சோதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த சோதனையை அடியோடு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு மாற்றி உள்ளது. அதன்படி ஜுரம், இருமல், தொண்டைக்கட்டு, மூக்கு ஒழுகுதல் போன்றவை தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேல் உள்ளவர்களையும் சோதனை செய்ய உத்தேசித்துள்ளது. வரும் 15 ஆம் தேதியுடன் தேசிய ஊரடங்கு முடிவடைகிறது. இந்த சோதனைகளின் அடிப்படையில் அதை தொடருவது குறித்து அரசு முடிவு எடுக்க உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும் அதிக பாதிப்பு உள்ள பகுதிகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் உள்ள அனைவரையும் கொரோனா சோதனை செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. தென் கொரியாவில் நடந்த சோதனைகளில் பாதிக்கப்பட்டோர் உடனக்குடன் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதால் பரவுதல் வெகுவாக குறைந்ததாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.