சென்னை: சென்னையில் இறுதியாண்டு மாணவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதற்காக காரணம், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதது என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதன் எதிரொலியாக சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் கல்லூரி விடுதிகளை கண்காணிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் உடல்நிலை குறித்து அறிய காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்த அறிவுறுத்தியுள்ள ஆணையர் பிரகாஷ், அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ளார்.