டில்லி

ல மாநில அமைச்சர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மேலும் நான்கு வாரங்களுக்கு மூட வேண்டும் என மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்துள்ளனர்.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் தேசிய ஊரடங்கை அறிவித்தார்.  ஆயினும் நாட்டில் கொரோனா தாக்குதல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  ஊரடங்கு முடிய இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் மாநில அமைச்சர்களுடன் தொடர்ந்து பிரதமர் விடியோ கான்பரன்சிங் மூலம் சந்திப்புக்களை நிகழ்த்துகிறார்.

அவ்வகையில் நேற்று நடந்த நான்காம் சந்திப்பில் பிரதமருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கலந்துக் கொண்டனர்.  இந்த சந்திப்புக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்.  பல மாநில அமைச்சர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துக் கொண்டனர்.

நேற்று நடந்த சந்திப்பில் பல மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் குறிப்பாக கல்வி அமைச்சர்கள் பிரதமரிடம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மேலும் குறைந்தது நான்கு வாரங்கள் மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மக்கள் ஒரே இடத்தில் கூடும் போக்கு குறிப்பாக வழிபாட்டு தலங்களில் கூடுவது அதிகரிக்கும் என்பதால் அவற்றை மேலும் சில காலம் மூடலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.