சென்னை: தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. அதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பாதுபாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த 56மாணவிகளுக்கு தொற்று உறுதியான நிலையில், தற்போது, சில மாணவிகளின் பெற்றோர்களுக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக  கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து, முக்கவசம் உள்பட பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது தேர்தல் காலம் என்பதால்,  மக்கள் அதிகளவில் கூடுவதால் தொற்று பரவல் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தனியார்  மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளில் 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளியில்,  9 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இதில்,  ஒரு மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்துரு, பள்ளிக்கு வந்த அனைத்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 56 மாணவிகளுக்கும் ஒரு ஆசிரியருக்கும்   தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மாணவிகள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கு விரைந்துவந்த மாவட்ட ஆட்சியர், தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டதுடன்,  மாணவிகளின் பெற்றோரும் கொரோனா சோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. அங்கு கொரோனா பரவலை தடுக்க அப்பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து பரிசோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், கொரோனா  பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அப்பகுதி முழுமையாக சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும் பலருக்கு சோதனை முடிவுகள் வரவில்லை.  இதனால், தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.