சென்னை:
கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதார அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
நாட்டில், டெல்லி,ஹரியானா, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் துவங்கியுள்ளது. தமிழகத்தில் சென்னையில் தொற்று பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த, சுகாதாரத் துறை வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலகத்தில் இன்று காலை, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையில் மருத்துவத்துறை, பொதுத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.