சென்னை: சென்னையில் 207 தெருக்களில் கொரோனா பாதிப்பு உள்ளது என்றும், தமிழகத்தில் தினசரி 25,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்து பொருட்கள் பாழங்கிணற்றில் கொட்டப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில்  அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து,  சென்னை மருத்துவக் கல்லூரியில் ரத்த தானம் வழங்கும் முகாம், மருத்துவ மாணவர்கள் பேரவையை  அமைச்சர் மா.சுப்பிர மணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், சென்னை அரசு மருத்துவமனையில், 341 மாணவர்கள் ஒரே நேரத்தில் ரத்த தானம் செய்து இருக்கிறார்கள்.  அவர்களை பாராட்டுகிறேன் என்றார்.

தொடர்ந்து பேசியவர், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிபடியாகத் தான் அதிகரித்து வருகிறது. அதனால், அனைவரும் முக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.  முகக்கவசம் அணிவதில் இருந்து எந்த விதி விலக்கும் அறிவிக்கப்படவில்லை. தற்போது சென்னையில் பல இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. நாளை மயிலாப்பூர் லஸ் கார்னரில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 50,000 பேருக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நானும் துறைச் செயலாளரும் கலந்து கொள்கிறோம்.

மேலும்,  தமிழகத்தில் 25 ஆயிரம் பேருக்கு நாள் ஒன்றுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.  சென்னையில் 207 தெருக்களில் 3-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறது, அதுபோல, 187 தெருக்களில் 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதிப்பு உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக,  51 பேர் அரசு மருத்துவமனையிலும், 85 பேர் தனியார் மருத்துவமனையிலும் என 136 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.