டெல்லி:

லக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது வீரியத்தைக் காட்ட தொடங்கி உள்ளது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  29 ஆக உயர்நதுள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளையும், மக்களையும் மிரட்டி வருகிறது. இதுவரை 75 நாடுகளில் பரவியுள்ள கொரோனா இந்தியாவிலும் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுஉள்ளது.  ராஜஸ்தான், டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மிரட்டல் காரணமாக வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை, இந்த ஆண்டு கொண்டாடப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே,  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்பட முக்கிய  தலைவர்கள் ஹோலி பண்டிகை நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டனர். அதுபோல பல ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில்,இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 28ஆக இருந்த நிலையில், இன்று 29ஆக உயர்ந்துள்ளது. அதுபோல தமிழகத்திலும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் பலருக்கு சந்தேகத்தின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் யாருக்கும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தமிழக அரசும் கொரோனா வைரஸ்  பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள  மாவட்ட  கலெக்டர்களுக்கு அறிவறுத்தியுள்ளது. இது குறித்து தமிழக அரசின் தலைமை  செயலாளர் கே.சண்முகம் விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில்,

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த  உடனடியாக அரசு, தனியார் மருத்துவமனை டாக்டர்களுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும்.

டாக்டர்கள் கோவிட்-19(கொரோனா) பாதித்தவர்களை  எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட வேண்டும்.

கோவிட்-19 பாதித்தவர்களை எப்படி சோதனைக்கு உட்படுத்த வேண்டும், சோதனை  கூடங்களில் ‘ரத்த மாதிரிகளை’ எப்படி கையாள வேண்டும், அவர்களை என்ன  மாதிரியான பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி மருத்துவமனைக்குள், அவசர  ஊர்திகள் மூலம் ஒரு  இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல  வேண்டும் என்பதையும் வழிகாட்ட வேண்டும்.  அவசர ஊர்திகளை கிருமிநாசினிகளை  பயன்படுத்தி தூய்மை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட தலைமை  மருத்துவமனைகள்,  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பெரிய தனியார்  மருத்துவமனைகளுக்கு  கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டுகள்  அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யப்பட வேண்டும்.

சிகிச்சை மையத்திற்கு  வரும் நோயாளிகள், அவர்களது உதவியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள்,  டாக்டர்கள்  கைகளை, உபகரணங்களை தூய்மை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.  அதேபோல் சிகிச்சை மையத்தில் இருந்து வெளியேறும் போதும் தூய்மை செய்வதை  கட்டாயம் கடைப்படிக்கவேண்டும்.

உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வருவாய்துறை, சுகாதாரத்துறை   அலுவலர்கள், ரயில்வே, துறைமுகம், விமானநிலைய நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய  அமைப்புகளைச் சேர்ந்தவர்களை கொண்ட கூட்டுக்குழு அமைத்து விழிப்புணர்வு , தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க  மக்கள் அதிகம் புழங்கும் அலுவலகங்கள், சந்தைகள்,  பள்ளி, கல்லூரிகளில்  ஒரு  சதவீதம் ஐட்ரோ குளோரைடு, 5சதவீதம் லைசால் கொண்டு கைகளை தூய்மை செய்வது  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அதற்கான வசதிகளை கல்வி  நிறுவனங்கள், தனியார் சந்தை மாளிகைகள், அலுவலகங்களில் ஏற்படுத்தி வைக்க  வேண்டும். கிராமபுறங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட கலெக்டர்கள் தனிகவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.