புதுடெல்லி: கொரோனா பரவல் என்பது ‘கடவுளின் செயல் என்றும், எதிர்பாராத நிகழ்வால் ஜிஎஸ்டி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது என்று அறிவார்ந்த கருத்துக்களை பேசியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இவர், மத்தியில், கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றது முதலே, பல அறிவுக்கு முரணான பல கருத்துக்களைப் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவலால், இந்த 2021ம் நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி வசூல், ரூ.2.35 கோடி அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அவர் பேசியுள்ளதாவது, “இந்தாண்டு நாம் ஒரு அசாதாரண சூழலை எதிர்கொண்டுள்ளோம். கடவுளின் செயலை நாம் தற்போது எதிர்கொண்டு வருகிறோம்.
கடந்த 2020ம் நிதியாண்டில், ரூ.1.65 லட்சம் கோடி அளவிற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்களுக்கு விடுவித்தது மத்திய அரசு. மார்ச்சில் விடுவிக்கப்பட்ட ரூ.13806 கோடியும் அதில் அடக்கம். ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக வசூலிக்கப்பட்ட வரி ரூ.95444 கோடி மட்டுமே” என்றார் அவர்.
இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மாநிலங்கள் தரப்பிலிருந்து வந்த கடுமையான அழுத்தத்திற்கு மத்தியில் நடைபெற்றது. தங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு முறையாக வழங்கப்படவில்லை என்று மாநிலங்கள் பல எதிர்ப்புகளை பதிவுசெய்து வருகின்றன.
உதாரணமாக, இந்தாண்டு தாங்கள் ரூ.25000 கோடி அளவிற்கு வருவாய் பற்றாக்குறையை சந்திக்க நேரும் என்று பஞ்சாப் மாநில அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.