சென்னை

மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதம் அவசியமாக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடந்தது.  அப்போது தேர்தலின் போது பதிவான வாக்குகள் எண்ணிக்கை வரும் மே மாதம் 2 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.  தற்போது நாடெங்கும் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது.  தமிழகத்திலும் அந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.

எனவே இதையொட்டி தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  மக்கள் ஒரே இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், முடிதிருத்தகங்கள், அழகு நிலையங்கள்,  வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.  அத்துடன் பெரிய கடைகளிலும் 50% மக்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.  அங்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் கொரோனா நெகட்வி என்னும் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.  இந்த சான்றிதழ் 72 மணி நேரத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.   அத்துடன் 2 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.