ரோம்

கொரோனா பரவுதல் அதிகரித்துள்ளதால் இத்தாலியில் ஏப்ரல் 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் இத்தாலியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த வைரஸ் தொற்று தொடங்கிய சீனாவை விட இத்தாலியில் அதிக மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன.   இங்கு சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனா பரவாமல் கட்டுப்படுத்த இத்தாலி அரசு நாடெங்கும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 3 ஆம் தேதி வரை அமல் படுத்தி உள்ளது.   ஆயினும் நிலைமை மிகவும் மோசமாகி வருவதால் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 12 ஆம் தேதி வரை இத்தாலி அரசு நீட்டித்துள்ளது.

இத்தாலி நாட்டு சுகாதார அமைச்சர், ”கொரோனா பரவுதல் மற்றும் மரணம் அளவுக்கு மீறுவதால் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   இந்த ஊரடங்கால் இத்தாலியில் பொருளாதார பாதிப்பு கடுமையாக இருக்கும். நீண்ட காலம் இந்த ஊரடங்கு அமலில் இருக்காது. இந்த உத்தரவு படிப்படியாகத்  தளர்வு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.