மாரடைப்பை குறைத்த கொரோனா..ஆச்சர்ய தகவல்கள்
பெரிய அதிர்ச்சி வந்தால் சின்ன அதிர்ச்சி மறைந்து போய்விடும் என்பார்கள். கொரோனா அதை நிரூபித்துக்கொண்டிருக்கிறது..
இந்தியாவில் ஒரு வருடத்தில் தோராயமாக 30 லட்சம் நோயாளிகள் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிப்படுகின்றனர் என்பது நடைமுறை உண்மை.
அந்தளவுக்கு இந்தியாவின் மிகப்பெரிய கொலைகார நோயாக இந்த மாரடைப்பு எனும் ஹார்ட் அட்டாக் இருந்து வருகிறது.
ஆனால் இப்போது கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பெரிதும் குறைந்துள்ளதாக மருத்துவர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
அதிலும் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின் இது மேலும் கணிசமாக குறைந்துள்ளது மருத்துவர்களுக்கே புரியாத ஒன்றாக உள்ளது.
இது பற்றி சென்னையை சேர்ந்த பிரபல இருதய நோய் மருத்துவர் டாக்டர் அஜித் முல்லரசி என்பவர் கூறுகையில், “வழக்கமா ஒரு நாளைக்கி நான்கு முதல் ஐந்து பேஷண்ட்ஸ் அட்மிட் ஆவாங்க. ஆனா இப்போ ஒருத்தர், ரெண்டு பேர் தான் வராங்க. அதான் புரியல..” என்கிறார்.
இது நமது அரசு மருத்துவமனைகளின் கூட்டமைப்பினால் சேகரிக்கப்பட்ட விபரங்களின் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல்களின்படி, மாரடைப்பில் தீவிரமான நிலையாக அறியப்படும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு (technically known as ST-elevation myocardial infarction – STEMI) காரணமாக பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 40% குறந்துள்ளதாகவும், ஏதாவது ஒரு பகுதிகளில் அடைப்புகளுடன் வரும் நோயாளிகளின் (Non- STEMI) எண்ணிக்கை கிட்டத்தட்ட 70% வரை குறைந்துள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு தீவிரமான உடல் மற்றும் மனரீதியிலான வேலைப்பளு இல்லாததும், கடினமான போக்குவரத்து நெரிசல்களினால் ஏற்படும் மன அழுத்தம் தற்போது இல்லாததும், முக்கியமாக காற்றின் மாசுபாடு ஏதும் இல்லாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் பார்க்கின்றனர் மருத்துவர்கள்.
“போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் மருத்துவமனைகளுக்கு வருவதற்கு உண்டான பயம் கூட காரணமாக இருக்கலாம்” என்கிறார் தமிழக விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை அமைப்பின் தலைமை மருத்துவர் டாக்டர் ஸ்ரீகாந்த்.
டெல்லி பத்ரா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி குழுமத்தின் சேர்மன் டாக்டர் உபேந்திரா கவுல், “என் மருத்துவமனைகளில் இந்தளவு குறைந்த ஆளவிலான பேஷண்ட் அட்மிசனை நான் இதுவரை பார்த்தில்லை. இதற்கான குறிப்பட்ட அறிவியல் ரீதியிலான காரணங்கள் எவையென்று இன்னமும் தெரியவில்லை” என்று ஆச்சர்யமடைகிறார்.
எது எப்டியோ… இந்த ஆட்கொல்லி நோயான மாரடைப்பு என்பது நம் மனம் சார்ந்த ஒன்று தான் என்பதும், மனதை அவசியமற்ற மன உளைச்சல், மன அழுத்தம் இவைகளிலிருந்து விலக்கி வைத்திருந்தாலே இந்நோயை எளிதாக வெல்லலாம் என்பதும் இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.
-லட்சுமி பிரியா