சேலம்: இந்தியா உள்பட உலக நாடுகளை புரட்டிப்போட்டி கொரோனா பெருந்தொற்று தமிழ்நாட்டில் மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது. சேலம் பகுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு  அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதற்கு அடுத்ததாக உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் அடுத்த இரு ஆண்டுகளில் அதன் பாதிப்பு எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருந்தது. இதன் காரணமாக 2019 மற்றும் 2020ம் ஆண்டில்  உலகையே அச்சறுத்தும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று  பரவி பேரிழப்பை ஏற்படுத்தியது. சுமார் 5 கோடி பேர் வரை பலியாகி  இருப்பதாக கணக்கிடப்படும்  இந்த தொற்று காரணமாக, உலக பொருளாதாரமும் கடுமையான சரிவுகளை எதிர்கொண்டது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இந்த தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ( 2025 மே மாதம்) மீண்டும் கொரோனா தொற்று பரவல் தொடங்கி உள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில்  இந்தியாவின் பல பகுதிகளிலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.  மாநில வாரியாக பார்க்கும்போது, புதுச்சேரியில் 13 நபர்களும், கேரள மாநிலத்தில் 15 நபர்களும், கர்நாடகாவில் 4 நபர்களும், மகாராஷ்டிராவில் 7 நபர்களும், மற்றும் தலைநகர் டெல்லியில் ஒரு நபரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை கூறியுள்ளது. அதே நேரத்தில் வீரியமில்லாத கொரோனா தொற்று என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். சேலம் மாவட்டம்  தாதாகாப்பட்டியை 4 பேருக்கும், மேலும் சில பகுதிகளை சேர்ந்த 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து,  அவர்கள் அரசு மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுதவிர மேலும் 20 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இது சேலம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால்,  இது வீரியமில்லாத கொரோனா தொற்று என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.