சென்னை:
கடந்த 2 வாரங்களில், சென்னை ஐஐடியில் பயின்று வரும் 71 மாணவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சென்னை ஐஐடியில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவது மாணவா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 வாரங்களில் இங்கு பயிலும் 66 மாணவா்கள், 4 உணவக ஊழியா்கள் உள்பட 71 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 32 பேருக்கு புதிதாக நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை ஐஐடி நிா்வாகம் அனுப்பிய சுற்றறிக்கையில், தற்போது மாணவா் விடுதியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அனைத்துத் துறை, நூலகம் உள்ளிட்டவை அனைத்தும் உடனடியாக மூடப்படுகிறது.
அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, அனைவரும் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும். அதே நேரம், விடுதியில் இருக்கும் மாணவா்கள் தனி நபா் இடைவெளியைப் பின்பற்றி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடா்பாக பெறப்பட்ட அதிகாரப்பூா்வ தகவலின்படி, ஐஐடி வளாகத்தில் வசிக்கும் 774 மாணவா்களில் 408 மாணவா்களிடம் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில், அங்குள்ள கிருஷ்ணா விடுதியில் அதிகபட்சமாக 22 பேருக்கும், ஜமுனா விடுதியில் அதிகபட்சமாக 20 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாணவா்கள் தரப்பில் கேட்டபோது, அனைவருக்கும் ஒரே உணவகம் மட்டுமே நடத்தப்படுகிறது. மேலும், விடுதிகளில் உள்ள அனைவரையும் காலி செய்யுமாறு நிா்வாகம் கூறியது. தற்போது விடுதியில் இருந்த அனைவரும் நாள்தோறும் வந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இதனால் யாா் நோய்த்தொற்றை பரப்பியது என கண்டறிய முடியவில்லை என தெரிவித்தனா்.
இதுகுறித்து ஐஐடி நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: 10 சதவீத மாணவா்கள் மட்டுமே விடுதியில் தங்க அனுமதிக்கப்பட்டு, குறிப்பிட்ட அளவிலான ஊழியா்கள் மற்றும் மாணவா்களுடனே நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விடுதி மாணவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன், அனைத்து விடுதி மாணவா்களையும் அங்கேயே இருக்க ஏற்பாடு செய்ததுடன், அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களுக்குத் தொடா்ந்து பாா்சல் செய்யப்பட்ட உணவு வழங்கப்படுகிறது.
அதே நேரம், ஆராய்ச்சி மாணவா்கள் செய்முறை பணிக்காக வெளியே சென்று வந்தாலும், அவா்கள் ஒவ்வொருவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்துதலுக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.