வாஷிங்டன்
சர்வதேச நாணய நிதியம் (ஐ எம் எஃப்) கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 ஏழை நாடுகளுக்குக் கடன் நிவாரணத்தை அறிவித்துள்ளது.
உலகெங்கும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தகம் முழுமையாக முடங்கியது. இதனால் உலக பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக ஏழை நாடுகள் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான நாடுகள் முன்னேற்றத் திட்டங்களுக்காகச் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றவற்றில் இருந்து கடன் பெற்றுள்ளன.
ஏழை நாடுகளுக்கு உதவ சர்வதேச நாணய நிதிய நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, “கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராட வசதியாக 25 ஏழை நாடுகளுக்கு அவர்கள் அளிக்க வேண்டிய கடனில் இருந்து உடனடியாக நிவாரணம் அளிக்கிறது. அதாவது அவர்கள் கடன் சுமைகளை ஈடுகட்ட நிதியத்தின் பேரழிவு கட்டுப்பாடு மற்றும் நிவாரண அறக்கட்டளை நிதி வழங்க உள்ளது.
இந்த கடன் நிவாரணம் கிட்டத்தட்ட அனைத்து ஆப்ரிக்க நாடுகள், ஆப்கானிஸ்தான், ஏமன், நேபாளம், உள்ளிட்ட 25 ஏழை நாடுகளுக்கு அளிக்க உள்ளது. அத்துடன் பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்குக் கொடுத்துள்ள கடன் வசூலை 2020 மே மாதம் முதல் 2021 ஆம் வருடம் வரை நிறுத்தி வைக்க உலக வங்கியுடன் இணைந்து கோரிக்கை விடுக்கிறோம்” என அறிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் கடந்த 2015 ஆம் ஆண்டு பேரழிவு கட்டுப்பாடு மற்றும் நிவாரண அறக்கட்டளையை அமைத்தது. அப்போது மேற்கு ஆப்ரிக்காவில் இருந்து பரவிய எபோலோ வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக அமைக்கப்பட்டது. தற்போது கொரோனாவை தடுக்க போராடும் நாடுகளுக்காக மறுபயன்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த அறக்கட்டளையில் தற்போது 5000 கோடி அமெரிக்க டாலர் உள்ளது.