சென்னை: தமிழகத்தில் நேற்று மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கிய நிலையில், அதில் கலந்துகொண்ட மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

2020-21-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை  நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழகஅரசு கொண்டு வந்துள்ள  7.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக, நீட் தேர்வில் வெற்றி  பெற்ற அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு நேற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது.

தமிழகஅரசு வெளியிட்ட தரவரிசையின் படி முதல்நாள் கலந்தாய்வுக்கு 267 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் மருத்துவக்கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கல்லூரியில் சேருவதற்கான ஆணையை வழங்கினார்.

முன்னதாக  நேற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற மாணாக்கர்கள் அனைவருக்கும்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில்,   4 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த மாணவர்கள் உடடினயாக சிகிச்சை பெறவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், அரசு கல்லூரிகளில் உள்ள 3 ஆயிரத்து 32 எம்.பி.பி.எஸ். இடங்களில் 227 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,147 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 86 இடங்களும் என 313 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன. அதுபோல, அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 165 பல் மருத்துவ இடங்களில் (பி.டி.எஸ்.) 12 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 1,065 பல் மருத்துவ இடங்களில் 80 இடங்களும் என 92 பி.டி.எஸ். இடங்களும் ஆக மொத்தம் 405 இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.