டெல்லி: கடந்த 7 நாட்களில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், தற்போது 6 நாட்களில் கொரோனா பாதிப்பு விகிதம் இரட்டிப்பாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறி இருக்கிறார்.
டெல்லியில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,007 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 23 பேர் பலியாகி இருக்கின்றனர்.
கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தியும் சராசரி வளர்ச்சியில் 40% சரிவு காணப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கும், இறப்புகளுக்கும் இடையிலான விகிதம் 80:20 ஆக உள்ளது.
5 லட்சம் விரைவு பரிசோதனைக் கருவிகள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். கொரோனாவை எதிர்த்து போரிட பி.சி.ஜி, பிளாஸ்மா சிகிச்சை, மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் ஆகியவற்றில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னர் 3 நாள்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது. கடந்த 7 நாட்களின் தரவின் அடிப்படையில், தற்போது 6 நாட்களில் கொரோனா பாதிப்பு விகிதம் இரட்டிப்பாகியுள்ளது. 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
உத்தரகண்ட், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், சண்டிகர், லடாக், புதுச்சேரி, டெல்லி, பீகார், ஒடிசா, டி.என், ஆந்திரா, உ.பி., பஞ்சாப், அசாம், திரிபுரா ஆகியவையே அந்த மாநிலங்களாகும். இந்தியாவில் 1.73 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 21,800 ஐசியு படுக்கைகள் கொண்ட 1,919 பிரத்யேக கோவிட் -19 மருத்துவமனைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. கொரோனாவை தடுப்பதில் கேரளா முன்னிலை வகிக்கிறது என்று தெரிவித்தார்.