புதுடெல்லி: கோவிட்-19 வைரஸ் தாக்கி குணமடைந்தவரின் ரத்தத்தை, பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா.

இதுகுறித்து பேசிய டாக்டர் ரன்தீப் குலேரியா, “மாற்று பிளாஸ்மா என்பது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நோயாளி குணமடைந்துவிட்டால், அவரது உடலானது தொற்றுநோயை எதிர்த்து போரிடும் நிலையில் இருக்கும்.

தொற்றுநோயை எதிர்த்துப் போராட, உடலானது, ரத்தத்தில் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. குணப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் ரத்தத்தை பிற வைரஸ் பாதித்த நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுத்தலாம்.

கொரோனா வைரஸிலிருந்து மீண்ட ஒரு நபருக்கு இந்த ஆன்டிபாடிகள் அதிக அளவு இருப்பது கண்டறியப்பட்டால், அவருடைய ரத்தத்தை தானம் செய்யும்படி நாம் அவரிடம் கேட்கலாம்.

அந்த ரத்தத்திலிருந்து, எதிர்க்கக்கூடிய அதிக செறிவுள்ள பிளாஸ்மாவை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். இந்த ஆன்டிபாடிகள் மற்றொரு தொற்று பாதித்த நபருக்கு மாற்றப்பட வேண்டும்.

இது நோய்வாய்ப்பட்ட நபர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் வைரஸை எதிர்த்து சிறந்த முறையில் போராடுகிறது. இது இப்போது இந்தியாவின் பல்வேறு ஆய்வகங்களில் சோதிக்கப்படுகிறது. பயனுள்ளதாக இருக்கும் என்று தரவு தெரிவித்தால், எதிர்காலத்தில் இதைப் பயன்படுத்துவோம்” என்றார்.