பீஜிங்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள சீனாவில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடங்கி உள்ளது.

சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலகெங்கும் பரவி உள்ளது.   இதனால் பல நாடுகள் தங்கள் தொழிற்சாலைகளை மூடி உள்ளன   அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட அனைத்து வர்த்தக நாடுகளும் கடும் பாதிப்பு அடைந்துள்ளன.  பல நாடுகளில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

மற்ற நாடுகளில் கொரோனா பரவுதல் அதிகமாகி உள்ள வேளையில் சீனாவில் குறைந்துக் கொண்டு வருகிறது.  சீனாவில் கடந்த சில நாட்களாக புதியதாக பாதிக்கப்பட்டோர் குறித்து எவ்வித தகவலும் வரவில்லை.  சீனா முழு அடைப்பில் இருந்து வெளிவந்து மெதுவாக இயல்பு வாழ்க்கைக்கு நகரத் தொடங்கி உள்ளது.

தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன.  இதற்கான பணிகளைச் செய்ய ஊழியர்கள் பணிக்கு வரத் தொடங்கி உள்ளனர்.  சீனாவில் அடியோடு முடங்கிப் போன உள்ளூர் போக்குவரத்து கடந்த வாரம்  21% வரை அதிகரித்துள்ளது.   அத்துடன் உள்நாட்டு வர்த்தகமும் மெதுவாக சீரடைந்து  வருகிறது.

வாகன உற்பத்தி தொழிற்சாலைகளான பி எம் டபிள்யூ, ஃபியட் கிறிஸ்லர், ஃபோர்ட், ஃபாக்ஸ்கான், ஹோண்டா, நிசான், டெஸ்லா, டொயோட்டா, வோக்ஸ்வாகன், உள்ளிட்ட தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தி தொடங்கி உள்ளதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   சீனப் பொருளாதாரம் விரைவில் வீழ்ச்சியில் இருந்து மீளும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.