சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இன்று காலை 11 மணி அளவில் தலைமைச்செயலாளர் ராஜீவ்ரஞ்சன் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். நாளை பிரதமர், மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், இன்று அவசர ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. 78 சதவீதத்துக் கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடுகளில் உள்ளது. இதையொட்டி, அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், குறிப்பாக தடுப்பூசிப் பணிகளை முடுக்கிவிடுவது குறித்தும் நாளை (புதன்கிழமை) பிரதமர் காணொலி வாயிலாக அவசர ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று ஒரே நாளில் 26,291 பேருக்கு புதியதாக தொற்று பதிவாகியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 760 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் மேலும் 836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,60,562 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,19,869 பேர் ஆண்கள், 3,40,658 பேர் பெண்கள், 3-ம் பாலினத்தவர்கள் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 12,551 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் 5 ஆயிரத்து 149 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 317 பேர் கொரோனானால் பாதிக்கப்பட் டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,39,131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
மேலும், தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் காரணமாக, தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதையொட்டி, இன்று காலை 11 மணி அளவில் தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ்ரஞ்சன், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு நெறிமுறைகள், தடுப்பூசி போடப்படுவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. இதைத்தொடர்ந்து நாளை, மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் வைக்க, “சமூக இடை வெளி, முக்கவசம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தி வருகிறது.