மராவதி

பிரிட்டனில் இருந்து கொரோனா பாதிப்புடன் வந்த பெண் ஒருவர் சோதனையை மீறி ரயிலில்  ஆந்திரா சென்று அங்குக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டனில் ஆசிரியையாகப் பணி புரியும் ஒரு பெண் இந்த மாதம் 21 ஆம் தேதி அன்று இந்தியாவுக்குத் திரும்பி வந்துள்ளார்.  டில்லியில் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அவரை தனிமப் படுத்தி விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  அவரை அழைத்துச் செல்ல அவரது மகன் ஆந்திராவில் இருந்து டில்லிக்கு வந்துள்ளார்.  தனிமை விடுதியில் இருந்து ஆசிரியை தப்பி ஆந்திராவுக்கு ரயிலில் மகனுடன் வந்துள்ளார்.

அவர் டில்லியில் இருந்து ஆந்திரப் பிரதேச எக்ஸ்பிரஸ் ரயிலில் மகனுடன் ராஜமகேந்திரவரம் சென்றுள்ளார்.  அவர் ரயிலில் தப்பி ஓடியதை அறிந்த டில்லி காவல்துறை உடனடியாக ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்து அவர் சென்று கொண்டிருந்த முதல் வகுப்பு பெட்டியில் இருந்து அவரையும் அவர் மகனையும் ராஜமகேந்திரவரத்தில் இறங்கிய உடன் பிடித்து அங்குள்ள தனிமை விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆந்திர அதிகாரிகளிடம் தனக்கு வீட்டுத் தனிமையில் இருக்கும்படி அதிகாரிகள் கூறியதாக ஆசிரியை பொய்த் தகவல் அளித்துள்ளார்.  ஆனால் ஏற்கனவே தகவல்கள் கிடைத்ததை ஒட்டி அதிகாரிகள் ஆசிரியையும் அவர் மகனையும் தனித் தனி அறைகளில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.  அந்த பெண்ணிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு அவருக்கு புது வகை கொரோனா தொற்று உள்ளதா எனக் கண்டறிய பூனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.