விழுப்புரம்:

விழுப்புரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த  விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை,  விழுப்புரம் நகரில் 18 பேருக்கும், செஞ்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை மொத்தம் 23 பேருக்கு பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், ஊரடங்கை மீறும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், வண்ண அட்டைகளை வழங்க நகராட்சி  முடிவு செய்துள்ளதாகவும், அதன்படி,ஒவ்வொரு வண்ண அட்டைகளுக்கும் ஒதுக்கப்பட்ட கிழமைகளில்தான், பொருட்களை வாங்க வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்த 46 பேரைக் கண்டறிந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில், 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை.

இதுவரையில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 207 பேருக்கு பரிசோதனை செய்ததில், 182 பேருக்கு நோய் தொற்று இல்லை. எஞ்சிய 25 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர், எனத் தெரிவித்தார்.