மதுரை
மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டுக்களைப் பிரதி எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான கோவில்களில் மதுரையில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இங்கு சுமார் 410 கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் பல அரிய தகவல்கள் அடங்கி உள்ளதாகக் கூறப்பட்டது. இதையொட்டி கடந்த ஆண்டு இந்த கல்வெட்டுக்களை வாசிக்கும் பணி தொடங்கியது.
இதுவரை கோவில் நிர்வாகம் கல்வெட்டு தொடர்பான ஆய்வறிக்கைகளை வெளியிடாமல் உள்ளது. தற்போது கோவில் நிர்வாகம் இந்த ஆய்வறிக்கையுடன் கல்வெட்டுக்களைப் பிரதி எடுத்து அவற்றையும் சேர்த்து வெளியிட முடிவு செய்துள்ளது. மேலும் கல்வெட்டு தொடர்பான விளக்கம் மற்றும் கல்வெட்டு வரிகளையும் அதில் இடம் பெறச் செய்யவும் முடிவு எடுத்துள்ளது.
இதையொட்டி பிரதி எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரதி எடுக்கும் குழுவில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் தலைமையில் 16 பேர் இடம் பெற்றுள்ளனர். இன்னும் 2 மாதங்களுக்குள் இந்த பணி நிறைவடையும் எனக் கோவில் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.