திரூச்சூர்: தங்கம் கடத்தல் விவகாரத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் உடன் நர்ஸ்கள், காவலர்கள் செல்ஃபி எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவர் பேசுவதற்கு போன் வழங்கிய நிகழ்வுகளும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் கேரள மாநில அரசின் அமைச்சர், மற்றும் முதலிவரின் தனிச்செயலர் சிவசங்கரன் மற்றும், ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட உள்ளனர்.
முக்கிய குற்றவாளியான, ஸ்வப்னா சுரேஷ், திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார். அங்கு கடந்த 7ந்தேதி அன்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அவர் திரிச்சூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான கே.டி.ரமீஸும் என்பவரும் வயிற்றுவலி காரணமாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர்கள் இருவரும் வெவ்வேறு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவுபடுத்தப்பட்டது.
ஸ்வப்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ அனில் அக்கரா வந்து பார்வையிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது., மேலும், செவிலியர்களும், காவல்துறையினரும் ஸ்வப்னா சுரேஷ் உடன் செல்பி எடுத்துக் கொண்டதாகவும், தொலைபேசியைக் கொடுத்து வெளியாட்களுடன் பேச உதவி புரிந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், செவிலியர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தங்கள் தொலைபேசியை வழங்க வில்லை என்றும் ஸ்வப்னா அருகே தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருவதாகவும் மறுத்து உள்ளனர்.
இதுகுறித்து கூறிய அந்த மருத்துவமனையின் நர்சிங் கண்காணிப்பாளர், ஸ்வப்னா அனுமதிக்கப் பட்டுள்ள வார்டுக்குள் மூன்று பெண் போலீஸ் மற்றும் வார்டுக்கு வெளியே இரண்டு அதிகாரிகள் இருந்தனர். அவர்களின் அனுமதியின்றி யாரும் நுழைய முடியாது. மேலும், எல்லா அறைகளுக்கான சாவியையும் முதல் நாளிலேயே காவல்துறையினரிடம் கொடுத்து விட்டோம், காவல்துறை முன்னிலையில் மருந்துகள் கூட வழங்கப்பட்டன, ”என்று ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
அதுபோல, ஸ்வப்னா அனுமதிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவமனையை அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அனில் அக்கரா, ஸ்வப்னாவை சந்திக்க யார் யார் வருகிறார்கள் என்பதை சரிபார்க்க தான் மருத்துவமனையை அடைந்ததாக தெரிவித்து உள்ளார்.
மேலும், “ஸ்வப்னா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்ற செய்தியைக் கண்டவுடன் நான் பேஸ்புக் லைவ் செய்தேன். அவர் மருத்துவமனையில் இருந்தபோது அவரது பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாக நான் எச்சரித்தேன். நான் ஒரு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரியைத் தொடர்புகொண்டு இது குறித்து அவருக்குத் தெரிவித்தேன். எனது நேரடி வீடியோவையும் அவருக்கு அனுப்பியிருந்தேன், ”என்று எம்.எல்.ஏ. விளக்கம் அளித்தள்ளார்.
அதுபோல, அந்த மருத்துவமனையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் ஏ.சி. மொய்தீனின் வருகை குறித்து சில சந்தேகங்கள் இருப்பதாகவும், அமைச்சரின் தலைமையில் மருத்துவமனையில் ரகசிய சந்திப்பு நடந்ததாக எம்.எல்.ஏ குற்றம் சாட்டினார்.
இதுமட்டுமின்றி ஸ்வப்னாவின் சிகிச்சை தொடர்பான மற்றொரு சர்ச்சையும் எழுந்துள்ளது. சில காவல்துறை அதிகாரிகள் ஸ்வப்னாவுடன் மருத்துவமனையில் செல்ஃபி எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆறு பெண்கள் காவல்துறை அதிகாரிகள் தங்கள் தொலைபேசியில் செல்பி எடுத்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அதிகாரிகள் பெண் அதிகாரிகளை எச்சரித்ததாகவும் கேரள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்பு இடையில், மருத்துவமனை நிர்வாகமோ, ஸ்வப்னாவுக்கு செவ்வாய்க்கிழமை எக்கோ கார்டியோகிராம் சோதனை நடத்தப்பட உள்ளதாகவும், மற்றொரு குற்றவாளியான ரமீஸுக்கு எண்டோஸ்கோபி சோதனை செய்யப்படும் என்றும் அறிவித்து உள்ளது.
கேரள தங்கக்கடத்தல் வழக்கில் தினசரி புதுப்புதுத் தகவல்களும், சர்ச்சைகளும் ஏற்பட்டு, பினராயி தலைமையிலான, மாநில அரசை திக்குமுக்காட வைத்து வருகிறது.