மீரட்: உத்தரப்பிரதேசத்தில் பழுது பார்க்க காவலர் ஒருவர் அளித்த செல்போனை கொடுத்த போது 13500 போன்களில் ஒரே ஐஎம்இஐ நம்பர் இருப்பது தெரிய வந்துள்ளது.

உ.பியில் ஒர சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தமது செல்போனை பழுது பார்ப்பதற்காக தொலைபேசி சேவை மையத்துக்கு எடுத்துச் சென்றார். இது நடந்தது கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதியாகும்.

அந்த போனுக்கான பழுது பார்ப்பு கட்டணமாக 2605 ரூபாயை தந்து விட்டு அந்த குறிப்பிட்ட செல்போன் நிறுவனத்திடம் இருந்து தமது போனையும் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.

பின்னர் அந்த போனை பார்க்கும் போது தான் அதன் ஐஇஎம்ஐ நம்பர் புதியதாக மாற்றப்பட்டதை கண்டுபிடித்தார். அதன் பிறகு அவர் புகார் தர, செல்போன் உற்பத்தி நிறுவனத்தை காவல்துறை அணுகியது. இதுதொடர்பாக அந்த சம்பந்தப்பட்ட நிறுவனத்தை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பப்பட்டது.

இது குறித்து மீரட் ஏடிஜி ராஜூவ் சபர்வால் கூறியதாவது: அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே விசாரணையை சைபர் போலீசிடம்  ஒப்படைத்தோம். அவர்கள் மொபைல் சேவை வழங்குநருடன் தொடர்பு கொண்டனர்.

இது இலவச தொலைபேசி அழைப்புகளைப் பற்றியது அல்ல. போலி ஐஎம்இஐ கொண்ட தொலைபேசியை, குற்றவியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். அதை கண்டுபிடிக்க இயலாது,

இது மிகவும் கவலையளிக்கிறது. ஒரு தவறாக இருந்தாலும், ஒரு குற்றம் நடந்தால் கற்பனை செய்து பாருங்கள், ஆயிரக்கணக்கான தொலைபேசிகளில் அதே ஐடி கண்டுபிடிக்கப்பட்டால் போதும். யாரைக் கண்டுபிடிப்பது என்பது போலீசாருக்கு எப்படித் தெரியும்?  என்றார் அவர்.

ஒரு தொலைபேசி தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், இந்த ஐஎம்இஐ எண்ணை பயன்படுத்தி அதை கண்டறியலாம். முன்னதாக, 2012 ஆம் ஆண்டில், கபில் சிபல் 18,000 தொலைபேசிகளில் ஒரே ஐ.எம்.இ.ஐ இருப்பதைக் கண்டறிந்ததாக மாநிலங்களவைக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.