பாட்னா :
திறந்தவெளியில் சிறுநீர் கழித்த, அரசு பள்ளி ஆசிரியருக்கு, மாவட்ட நிர்வாகம் ‘நோட்டீஸ்’ அனுப்பிய சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம், பேனிபூர் பகுதியில், சமீபத்தல் உதவி ஆட்சியராக விஜய் பிரகாஷ் மீனா என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்றுக்கொண்டதும் மத்திய பாஜக அரசின் “தூய்மை இந்தியா” திட்டத்தை இப்பகுதியில் தீவிரமாக அமல்படுத்தப்போவதாக அறிவித்தார்.
இதையடுத்து சுற்றுப்புற தூய்மைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்வதுடன், பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு தண்டனை அளிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள, ஓர் அரசு அலுவலக வளாகத்திற்கு வெளியில், சிறுநீர் கழித்த, அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியரான, செரீனா குமாருக்கு, விதியை மீறி, பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்கான விளக்கம் கேட்டு, விஜய் பிரகாஷ், ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளார்.
தூய்மை முக்கியம் என்றாலும் இதற்காக நோட்டீஸ் அனுப்பியது சரிதானா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த 2017ம் வருடம் ஜூன் மாதம், மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன் பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியது.
“தூய்மை இந்தியா திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதாக தெரிவிக்கும் மத்திய அரசின் அங்கமான ஒரு அமைச்சர் இப்படி பொது இடத்தில் சிறுநீர் கழிக்கலாமா” என்ற கேள்வியை சமூகவலைதளங்களில் பலரும் எழுப்பினர்.
ஆனால் கேள்வி எழுப்பப்பட்டதோடு சரி.
ஆனால் ஒரு எளிய ஆசிரியர் என்றால் நோட்டீஸ் விடுவதா?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.