நரசிம்மராவ் நூற்றாண்டு விழாவில் சர்ச்சை…
முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ், ஒன்று பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இந்த ஆண்டு அவரது நூற்றாண்டாகும்.
இதனைப் பெரிய அளவில் கொண்டாட , சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா மாநில டி.ஆர்.எஸ். அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஐதராபாத், வாராங்கல்,கரீம்நகர்,வங்கரா( நரசிம்மராவ் பிறந்த ஊர்) மற்றும் டெல்லியில் உள்ள தெலுங்கானா பவன் ஆகிய 5 இடங்களில் நரசிம்மராவின் வெண்கல உருவச்சிலை அமைக்கப்படுகிறது.
இராமேசுவரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னம் போல், நரசிம்மராவுக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட நினைவுச் சின்னம் உருவாக்கப்படுகிறது.
ஐதராபாத்தில் நரசிம்மராவ் சமாதி அமைந்துள்ள உசேன்சாகர் ஏரிக்கரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நூற்றாண்டு விழா ஆரம்பமாகிறது.
ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் இந்த விழாவுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது, தெலுங்கானா அரசு.
ஆனால் நரசிம்மராவ் விழாவைக் கொண்டாட அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.‘’ அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்குக் காரணமே நரசிம்மராவ் தான். மசூதி இடிக்கப்பட்டபோது அவர் மவுனமாக இருந்தார். அரசியல் லாபத்துக்காக நரசிம்மராவ் நூற்றாண்டு விழாவைத் தெலுங்கானா அரசு நடத்துகிறது’’ என்று ’’ஜமாத்- ஈ- இஸ்லாமி தெலுங்கானா ’ என்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
’’ முதல்வர் சந்திரசேகர ராவின் உண்மையான நிறம் வெளியாகி விட்டது. நரசிம்மராவை ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினர் கொண்டாடுகின்றனர். அவர்களிடம் நல்ல பெயர் வாங்க, நரசிம்மராவ் பிறந்த நாளை நடத்துகிறது டி.ஆர்.எஸ்.அரசு’’ என்று புகார் வாசிக்கிறது, ’மஜ்லிஸ் பாச்சோ தெராக்’ என்ற இஸ்லாமிய அமைப்பு.
ஆனால் ஐதராபாத் எம்.பியும், முஸ்லிம் மஜ்லிஸ் கட்சித் தலைவருமான( எம்.ஐ.எம்) அசாதுதீன் ஒவைசி, இந்த விவகாரம் குறித்து இதுவரை கருத்து ஏதும் சொல்லவில்லை.
-பா.பாரதி.