சென்னை: உளுந்தூர்பேட்டை – சேலம் சாலையில் விபத்துக்கள் அதிகரித்து வருவதால், அதை 4 வழிச்சாலையாக மாற்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். உளுந்தூர்பேட்டை சேலம் இடையிலான குறுகிய 8 இடங்களிர்ல 4 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
சேலம்-உளுந்தூர்பேட்டை இரு வழிச்சாலையாக இருந்தது. இதை 4 வழிச்சாலையாக மாற்ற மத்தியஅரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு கடந்த 2008ம் ஆண்டு சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற ஒப்புதல் அளித்தது. அதன்படி சேலம் சீலநாயக்கன் பட்டியில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை 136 கிலோமீட்டர் தூரம் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. ஆனால், இந்த சாலையின் பல இடங்கள் 2 வழிப்பாதையாகவும் உள்ளது. இந்த பணிகள் கடந்த 2013ம் ஆண்டு நிறைவு பெற்று செயல்பாட்டுக்கு வந்தது.
ஆனால், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால், இச்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால், இந்த சாலை முழுமையாக 4 வழிச்லையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள், போக்குவரத்து ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் அமைப்பினர் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்
இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கௌதமசிகாமணியும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய (நகாய்) அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். அவரது மனுவில், நான்கு வழி சாலை சில இடங்களில் நிறைவு பெறாததால் 2 வழி சாலைகளாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த 7 வருடங்களில் மட்டும் 800க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த சாலைப் பணி அப்போதைய காங்கிரஸ் அரசால், கடந்த 2008 ம் ஆண்டு 941 கோடியில் தொடங்கப்பட்டது. ஆனால், அது இதுவரை நிறைபெறாமல் உள்ளது. பல இடங்களில் இரண்டு வழிச்சாலையாக பயன்படுத்துவதால் விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றன. குறிப்பாக ஆத்தூர், உடையார்பட்டி, வாழப்பாடி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிதிகளில் அதிக மேம்பாலங்களும் நிறைய வளைவுகளும் இருப்பதால் வாகனங் கள் கடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த சாலை உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம் வழியாக சேலம் முதல் சென்னை சாலையை இணைக்கிறது. இந்த சாலை பணி 2013ல் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் முழுமையாக நிறைவேற்றப்பட வில்லை. இதை கவனத்தில் கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவு செய்யப்படாத பணிகளை உடனடியாக நிறைவேற்றி நான்கு வழி சாலை பணிகளை விரைவாக அமைத்து தர வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த நிலையில், பொதுமக்களும் விரைவில் 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த சாலை அமைக்கும் பணியின்போது, உளுந்தூர் பேட்டை சேலம் இடையே உள்ள பகுதிகளான உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர் பேட்டை ஆகிய எட்டு இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு 9 ஆண்டுகளாகியும் இன்னும் 8 இடங்கள் இருவழிச் சாலையாக இருக்கிறது. இநத சாலையில் இடையிடையே மேட்டுப்பட்டி, நத்தக்கரை, மாடூர் ஆகிய 3 இடங்களில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த புறவழிச்சாலைகள் தற்போது ஏற்பட்டுள்ள வாகன போக்குவரத்தை சமாளிக்க முடியாத அளவிலேயே உள்ளது.
இதன் காரைணாக நெடுஞ்சாலையில், அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக 60 முதல் 80 விபத்துக்கள் நடைபெறுவாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், உளுந்தூர்பேட்டை சேலம் இடையேயான எட்டு புறவழிச்சாலைகளை 4 வழிச்சாலையாக மாற்ற மத்தியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், கடந்த 2019ம் ஆண்டு உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரை உள்ள புறவழிச்சாலைகள் அனைத்தும் நான்கு வழிச்சாலை ஆக மாற்றுவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. டிஜிபிஎஸ் எனப்படும் நவீன கருவி கொண்டு சாலையை அகலப்படுத்துவது தொடர்பாக அளவீடு செய்யப்பட்டது. இதனால் சாலை பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.