ஓசூர்: ஓசூர் அருகே நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி கடத்தப்பட்டு, அதில் இருந்த  ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பூந்தமல்லியிலிருந்து கண்டெய்னர் லாரியில் ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்கள் ஏற்றப்பட்டு, லாரி மும்பை நோக்கி  சென்றுகொண்டிருந்தது.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மேலுமலை என்னுமிடத்தில்  தேசிய நெடுஞ்சாலையில்   லாரி வந்துகொண்டிருந்தபோது,  டிரைவர்களான அருண்(வயது 26)., சதீஷ் குமார்(வயது 29) ஆகிய இருவரையும் தாக்கி லாரியை கடத்திய  கொள்ளை கும்பல் லாரியில் இருந்த  மொபைல் போன்களை கொள்ளையடித்துவிட்டு,  லாரியை வழியிலேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து லாரி டிரைவர்கள் கொடுத்த புகாரின்பேசில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களின் மதிப்பு ரூ.10 கோடி மதிப்பிலானது என தெரிவித்து உள்ளனர்.

காயமடைந்த டிரைவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளை கும்பலை பிடிக்க ஒசூர் டிஎஸ்பி முரளி தலைமையிலான 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கி உள்ளனர். கொள்ளை சம்பவம் நடந்த மேலுமலை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதமும் இதே போன்று கொள்ளை  சம்பவம் அரங்கேறியது. காஞ்சிபுரத்தில் இருந்து மும்பைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான செல்போன்கள், ஆந்திர மாநிலம் நகரி அருகே கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிலரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து  செல்போன்களை பறிமுதல் செய்தனர்.  இந்த நிலையில் மீண்டும் அதுபோல கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.