குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த சோனா என்ற பெண் வழக்கறிஞர் அங்குள்ள, வாகன பழுது பார்க்கும் பட்டறையில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் தனது காரை, ரிப்பேர் செய்ய கொடுத்திருந்தார்.
காரை பழுது பார்த்த பட்டறை உரிமையாளர் 9 ஆயிரத்து 900 ரூபாய்க்கு பில் போட்டு கொடுத்தார்.
ஆனால் வழக்கறிஞர் சோனா “எனது காரில் உள்ள பல பாகங்களை காணவில்லை” என தகராறு செய்ததுடன் காரை அங்கேயே நிறுத்தி விட்டுச்சென்றுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் கார் அந்த பட்டறையில் நிறுத்தப்பட்டுள்ளது.
வக்கீல் சோனா இந்த விவகாரத்தை காந்திநகர் நுகர்வோர் நீதிமன்றம் கொண்டு சென்றார்.
“தனது காரை ஒழுங்காக ரிப்பேர் செய்யவில்லை” என அவர் புகார் தெரிவித்து இருந்தார்.
ஆனால், காரை ரிப்பேர் செய்த பட்டறை அதிபரோ “காரை ரிப்பேர் செய்து முடித்து பலமுறை ஈ-மெயில் அனுப்பியும், சோனா தனது காரை எடுத்து செல்லவில்லை” என அந்த நுகர்வோர் நீதிமன்றத்தில் பதிலுக்கு, புகார் அளித்தார்.
“காரை நிறுத்தி வைத்ததற்கு நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் பார்க்கிங் கட்டணம் தர வேண்டும்” என்றும் மனுவில் அவர் கூறி இருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் “அந்த பட்டறையில் சோனாவின் கார் 910 நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளது. பார்க்கிங் கட்டணமாக நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் வீதம் மொத்தம் 91 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்” என வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.
– பா. பாரதி