புதுடெல்லி: தொழிலாளர் சட்டத்தில் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள திருத்தங்கள், பிஓசிடபிள்யூ(BOCW) சட்டத்தை ரத்துசெய்துவிடும் என்பதால், அந்த திருத்தங்களைக் கைவிட வேண்டுமென பிரதமர் மோடிக்கு, கட்டுமானத் தொழிலாளர்களுக்கான தேசிய கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிஓசிடபிள்யூ சட்டத்தின்படி, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தற்போது பல்வேறான சலுகைகள் கிடைத்து வருகிறது. மத்திய அரசின் புதிய நடைமுறைகளின்படி, 36 பிஓசிடபிள்யூ மாநில வாரியங்கள் கலைக்கப்படுவதோடு, கட்டுமானத் தொழிலாளர்களின் 4 கோடி பதிவுகளும் நீக்கப்படும்.
மேலும், பிஓசிடபிள்யூ வாரியங்களை மூடுவதானது, வயதான மற்றும் ஊனமுற்ற முன்னாள் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கிடைத்துவரும் பென்ஷன் தொகை நிறுத்தப்படுவதோடு, கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுடைய கல்விக்கு அளிக்கப்பட்டுவரும் உதவித்தொகையும் ரத்தாகிவிடும்.
மிகவும் கடினமான சூழலில் பணிசெய்துவரும் கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் புதிய திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டி, கட்டுமானத் தொழிலாளர்களுக்கான தேசிய கூட்டமைப்பு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது.