பெங்களூரு: தொகுதி மறுவரையறை தொடர்பாக, திமுக குழுவினர், கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக எதிர்க் கட்சி, ஆளும் கட்சி முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் கூட்டத்திற்கு வரும் 22 ஆம் தேதி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 7 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுக்கும், முன்னாள் முதல்வர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம், மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அமைச்சர்கள், எம்.பி.க்கள் குழு அமைத்து, அவர்கள் மூலம் அம்மாநில அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து நேரில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி,  கர்நாடக முதலமைச்சரை தி.மு.க. குழுவினர் நேரில் சந்தித்தனர். பெங்களூரு சென்றுள்ள அமைச்சர் பொன்முடி,  திமுக எம்.பிஅப்துல்லா  ஆகியோர் அங்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.