டில்லி
பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தில் அவர் ஹைஃபா நகருக்கு சென்று அங்குள்ள இந்திய வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அதையொட்டி தீன்மூர்த்தி சவுக் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
டில்லியில் உள்ள தீன்மூர்த்து சவுக் மற்றும் தீன் மூர்த்தி மார்க் ஆகியவைகளின் பெயர் தீன்மூர்த்தி ஹைஃபா சவுக் எனவும், தீன்மூர்த்தி ஹைஃபா மார்க் எனவும் பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கும், இஸ்ரேலில் பிரதமர் செல்லப்போகும் ஹைஃபா நகருக்குன் உள்ள தொடர்பு குறித்து பார்ப்போம்
தீன்மூர்த்தி மார்க் குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் பல புள்ளி விவரங்கள் கொடுத்துள்ளது. இவை இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பே இல்லை. நாம் அனைவரும் தீன் மூர்த்தி மார்க் என்பது காந்திக்கு தொடர்புடையது, அவர் வைத்திருந்த மூன்று குரங்கு பொம்மைகளை குறிப்பது என எண்ணுகிறோம். ஆனால் அது இந்தியாவின் மூன்று குதிரைப்படைகளை குறிப்பதாகும்.
சென்ற நூற்றாண்டு 1918ஆம் வருடம் முதல் உலகப்போரில், ஓட்டோமான் படையினரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த இஸ்ரேலின் ஹைஃபா நகரை மீட்க கடும்போர் நிகழ்ந்தது. 3000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான நகரம் இது. இந்தப் போரில் ஹைஃபாவை மீட்க இந்திய அரசர்களின் வீரர்களும் கலந்துக் கொண்டனர். அவர்கள் பிரிட்டன் அரசின் கட்டாயத்துக்காக வந்தவர்கள் இல்லை என்பதும் தாங்களாகவே முன்வந்து ஹைஃபா நகரை மீட்க உதவி செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் சுமார் 900 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து ஹைஃபா நகரை மீட்டனர். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 13ஆம் தேதி ஹைஃபா நகரை மீட்ட தினம் இந்தியாவிலும், இஸ்ரேலிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹைஃபா நகரில் நகருக்காக உயிர் நீத்த இந்திய வீரர்களின் நினைவுச்சின்னம் உள்ளது.
பிரதமர் மோடி தனது இஸ்ரேல் பயணத்தின் போது ஹைஃபா நகருக்கு சென்று அங்குள்ள இந்திய வீரர்களின் நினைவுச் சின்னத்துக்கு மரியாதை அளிப்பார் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் மூன்று குதிரைப் படைகளும் போரிட்டு ஹைஃபா நகரை மீட்டதற்காக தீன்மூர்த்தி மார்க், பெயர் மாற்றப்பட்டு தீன்மூர்த்தி ஹைஃபா மார்க் என புதுப்பெயர் சூட்டப்படுகிறது.