டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையினரால் முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், காங்கிரஸ் பொருளாளர் மக்கென் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் வருமானவரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் தேசிய பொருளாளர் அஜய் மக்கென் தெரிவித்துள்ளார். மேலும், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வங்கிக் கணக்குகளை முடக்குவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையில் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதுடன், விவசாயிகளின் போராட்டம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதனால், மத்திய பாஜக அரசு செய்வதறியாமல் திணறி வருகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான், நாங்கள் கொடுத்த காசோலைகள் வங்கியில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது, வங்கியில் விசாரித்துப் பார்த்தோம். அப்போதுதான் எங்களுக்கு தெரியவந்தது,
வருமானவரித்துறையால் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளும், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது என தெரியவந்தது.
காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட நிதியான ரூபாய் 210 கோடி வருமானவரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
2018 -19 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக கூறி வருமான வரித்துறையினர் கணக்கு களை முடக்கி உள்ளனர். மேலும் கட்சியின் வங்கி கணக்குகளை மீட்க ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் வங்கிக் கணக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயகமே முடக்கப்பட்டிருக்கிறது. வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் வேண்டுமென்றே காங்., வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. 2018-ல் வருமான வரி தாக்கல் தாமதத்துக்கு இப்போது தேர்தல் நெருங்கும்போது நடவடிக்கை எடுத்தது உள்நோக்கம் கொண்டது.
எதிர்கட்சிகளின் வங்கிக்கணக்குகளை முடக்குவது, ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம்.
வருமான வரித்துறை நடவடிக்கையால் ராகுலின் நீதி யாத்திரை மட்டுமின்றி அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் முடங்கும்.
வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதால் மின்கட்டணம் செலுத்த, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூட பணமில்லை,”
இவ்வாறு தெரிவித்தார்.