டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2கோடி கையெழுத்து பெறப்பட்ட ஜனாதிபதியிடம் மனு அளிக்கச்சென்ற ராகுல் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் , காவல்துறை யினரால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். வடமாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் முகாமிட்டு கடும் குளிரிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். போராட்டம் இன்று 29வது நாளாக தொடர்கிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இதுதொடர்பாக ஏற்கனவே குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனுகொடுத்துள்ளனர்.
அதே வேளையில், விவசாயிகளுக்கு பாதகத்தை ஏற்ப்படுத்தும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விவசாயிகளின் போராட்ட விவகாரத்தில் குடியரசுத்தலைவர் தலையிட்டு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரும் மனு தயாரிக்கப்பட்டு, அதில், நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 2 கோடி பேரிடம் அந்த கட்சியினர் கையெழுத்து பெற்று உள்ளனர்.
இந்த 2 கோடி கையெழுத்துக்கள் அடங்கிய கோரிக்கை மனு ஏற்றப்பட்ட வாகனத்துடன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்க இருக்கிறார்.
முன்னதாக கட்சி தலைமையகத்தில், ராகுல் காந்தி கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களை கட்சி தலைமையகத்தில் சந்தித்தார். அதையடுத்து விஜய் சவுக் பகுதியில் இ ஜனாதிபதியிடம் மனுகொடுக்க அவர்கள் ராஷ்டிரபதி பவனுக்கு அணிவகுத்துச் சென்றனர்.
ஆனால், அவர்களை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து, வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
இதுகுறித்து கூறிய பிரியங்ககாந்தி, “இந்த அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பும் பயங்கரவாதத்தின் கூறுகள் கொண்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எங்கள் ஆதரவைக் குரல் கொடுப்பதற்காக இந்த அணிவகுப்பை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்து உள்ளார்.