டில்லி:

வரும் 12ந்தேதி அகமதாபாத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

ஏற்கனவே பிப்ரவரி 28ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம், புல்வாமா தாக்குதல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் 12ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவிஏற்ற பின், 58 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் பிப்ரவரி 28ந்தேதி நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், புல்வாமா தாக்குதல், அதைத் தொடர்ந்து இந்திய விமானப்படை பதிலடி காரணமாக இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டதால்,  காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வரும் 12ந்தேதி, திட்டமிட்டபடி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக் கூட்டம் அகமதாபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில்,  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது தாயார் சோனியா மற்றும் சகோதரி பிரியங்கா காந்தியுடன் கலந்துகொள்கிறார்.