டெல்லி: கட்சியில் தேர்தல் நடக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சி இருக்கையில்தான் அமரும் சூழல் ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலை வர்களில் ஒருவரான  குலாம் நபி ஆசாத் எச்சரித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தலைவர் நியமிக்கப்படாமல், சோனியா காந்தியே இடைக்காலத்தலைவராக தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில்,  அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு, தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், கபில்சிபல், வீரப்பமொய்லி உள்பட 23 பேர் கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதி யிருந்தனர்.

இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. சோனியா தனது இடைக்கால தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக  அறிவித்தார். இந்த நிலையில்,  சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க் கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல்காந்தி,  மூத்த தலைவர்கள் மீது அதிரடியாக குற்றம் சுமத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து,  இடைக்கால தலைவர் பதவியிலிருந்து சோனியா காந்தி விலக முடிவு செய்துள்ள தால் புதிய தலைவர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகவும் ராகுல் காந்திக்கும் மூத்த தலைவர்களுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவும் காங்கிரஸ் தலைவர் பதவி தேர்வு செய்யப்படாமல் சோனியா காந்தியே இன்னும் ஆறு மாதங்களுக்கு தலைவராக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது

இந்த பரபரப்பான சூழலில், மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் செய்தியாளர்கள், கட்சி தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்தவர்,  ‘கட்சியின் அகில இந்திய தலைவா், மாவட்ட தலைவா்கள், மண்டல தலை வா்கள், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்கள் என அனைவரும் தோ்தல் மூலமே தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். இதைத்தான் கடிதத்தில் வலியுறுத்தினோம்.

கட்சிக்குள் தேர்தல் நடைபெறவில்லை என்றால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சி யாக தான் இருக்கும்.

காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக உழைத்தவர்கள் நாங்கள் எழுதிய கடிதத்தை வரவேற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

குலாம் நபி ஆசாத்தின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது