போபால் :
மத்தியபிரதேச மாநிலத்தில் 28 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 3 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்த இடைத்தேர்தலில் கணிசமான இடங்களில் வென்றால் மட்டுமே சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நீடிக்க இயலும். இதனால் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது.
தேர்தல் பிரச்சாரம் நாளை முடிவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கமல்நாத்தின் ‘நட்சத்திர பேச்சாளர்’ அந்தஸ்தை’ ரத்து செய்து தேர்தல் ஆணையம் நேற்று திடீர் நடவடிக்கை மேற்கொண்டது.
“தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததால் கமல்நாத்தின் ’’நட்சத்திர பேச்சாளர்’’ அந்தஸ்து நீக்கப்படுகிறது’ என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
’’பிரச்சாரம் முடிவடைய இரு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கமல்நாத்துக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ நோட்டீஸ் அனுப்பாமல், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருப்பது ஜனநாயக விரோதமானது’’ என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் எம்.பி.யுமான விவேக் தங்கா தெரிவித்துள்ளார்.
– பா.பாரதி