மத்திய அரசுக்கு எதிராக நவம்பர் 30ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள், மாநில தலைவர்கள் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்களின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டில்லியில் நடைபெற்றது. ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக அக்டோபர் மாதம் நடைபெறுவதாக இருந்த கண்டன போராட்டங்கள், ராகுல்காந்தியின் வெளிநாடு பயணத்தால் தள்ளிவைக்கப்பட்டது. அந்த போராட்டங்களை இம்மாதம் முன்னெடுப்பது தொடர்பாகவும், மத்திய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை காங்கிரஸ் தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபால், ”மத்திய அரசை கண்டித்து அனைத்து மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்கள் அனைத்தும் வருகிற 25ம் தேதிக்கு முன்பாக நிறைவடையும். மத்திய அரசால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வரும் நவம்பர் 30ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படும். இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள். கூட்டணி கட்சி தலைவர்களுக்கு இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.