புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18வது மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய நிலைக் குழுக்களின் தலைவர் பதவியை வழங்க பாஜக ஒப்புக்கொண்டுள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 5வது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தது.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் துறைகள் தொடர்பான மொத்தமுள்ள 24 நிலைக்குழுக்களில் நான்கு நிலைக் குழுக்களுக்கான தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மக்களவையின் கீழ் 16 நிலைக்குழுக்களும், ராஜ்யசபாவின் கீழ் எட்டு நிலைக்குழுக்களும் உள்ளன. இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றும் 31 உறுப்பினர்களைக் கொண்டது.

கட்சிகளின் ஆலோசனையின் பேரில் மக்களவைத் தலைவர் மற்றும் ராஜ்யசபா தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட 21 லோக்சபா உறுப்பினர்களும், 10 ராஜ்யசபா உறுப்பினர்களும் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

ஓராண்டு.பதவிக்காலம் உள்ள இந்த குழுக்கள் அந்த துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்களை ஆய்வு செய்கின்றன.

முக்கியமான பிரச்சினைகளில் மசோதாக்களை கொண்டு வரவும், கொள்கைகளை உருவாக்கவும் அரசுக்கு அறிவுறுத்துகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அரசு ஏற்றுக்கொண்டதாகவும் மக்களவையில் வெளியுறவு, கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயம் ஆகிய மூன்று துறைகளும் மாநிலங்களவையில் கல்விக்கான நிலைக்குழுவின் தலைவர் பதவியும் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

தவிர, சமாஜ்வாதி, தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு நிலைக்குழு தலைவர் பொறுப்பும் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக செப்டம்பர் இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.