போபால்:

த்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  அங்கு ஆட்சி செய்து வரும் பாரதியஜனதா ஆட்சிக்கு முடிவு கட்ட மாயாவதி கட்சியியுடன் கூட்டணி சேர காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தில் பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன்  காங்கிரஸ் கூட்டணி குறித்து தனது முதல் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மற்றும்  அடுத்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலிலும்  பாரதியஜனதா கட்சியை வீழ்த்தும் விதமாக, இரு கட்சிகளுக்கு இடையே ஆரம்ப கட்ட விவாதங்கள் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது..

கடந்த மாதம் கர்நாடகாவில் குமாரசாமி முதல்வராக பதவி ஏற்ற நிகழ்ச்சிக்கு நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் வந்திருந்தனர்.  அவர்களை அனைவரும் இணைந்து பாரதியஜனதாவுக்கு மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளதை தங்களது ஒருங்கிணைப்பு மூலம் தெரியப்படுத்தினர்.

அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதியுடன்,அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி  கட்டித்தழுவி சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவி வருகிறது.

மத்திய பிரதேசத்தில், பாரதியஜனதாவுக்கு 45 சதவிகித வாக்கு வங்கி உள்ளது. இதை தடுக்க வேண்டுமென்றால், பகுஜன் சமாஜ், காங்கிரஸ் இணைந்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரசுக்கு ம.பி.யில் உள்ள 36 சதவிகித வாக்குகளுடன், பகுஜன் சமாஜ் கட்சியின் 7 சதவிகித வாக்குகளும் இணைந்தால் ம.பி.யில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக மாற்று சக்தியாக உருவாகலாம்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு உ.பி., சந்தீஷ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் குறிப்பிட்ட அளவிலான வாக்கு வங்கிகள் உள்ளது. இதை கருத்தில்கொண்டு, காங்கிரஸ் மாயாவதி கட்சியுடன் கூட்டணிக்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.