ஐதராபாத்
மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி இன்று அதிகாலை காலமானார்.
கடந்த 1942 ஆம் வருடம் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மெகபூப் நகரில் ஜெய்பால் ரெட்டி பிறந்தார். இவர் இளம் வயதிலிருந்தே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது 1977 ஆம் வருடம் அப்போதைய பிரதமர் இந்திர காந்தி அவசரநிலை பிரகடனம் செய்த போது கடுமையாக எதிர்த்தார். கட்சியில் இருந்து விலகி ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
கடந்த 1980 ஆம் வருடம் நடந்த மக்களவை தேர்தலில் அவர் இந்திரா காந்தியை எதிர்த்து மேடக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இவர் 1985 முதல் 1988 வரை ஜனதா கட்சியின் பொதுச் செயலராகப் பதவி வகித்துளார். மக்களவையில் 5 முறையும் மாநிலங்களவையில் இரு முறையும் உறுப்பினராக இருந்துள்ளார். அத்துடன் ஆந்திர சடப்பேர்வையில் அவர் நான்கு முறை உறுப்பினராக இருந்துள்ளார்.
மீண்டும் 1999 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெயபால் ரெட்டி மத்திய அமைச்சரவையில் அமைச்சர் பதவி வகித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் ஐதராபாத் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இன்று அதிகாலை மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 77 ஆகும்.