டில்லி
காஷ்மீர் மாநில நிலை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வந்த அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டு அனைவரையும் காவல்துறையினர் திருப்பி அனுப்பி உள்ளனர். அத்துடன் மாநிலத்தில் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இது வழக்கமான பணி தான் என அரசு தரப்பில் கூறப்பட்டாலும் அனைத்து மக்களையும் 15 நாட்களுக்கு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து நேற்று காங்கிரஸ் கட்சி ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தியது. அதில் முன்னாள் காஷ்மீர் முதல்வரும் தற்போதைய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத், “இதுவரை எப்போதுமே அமர்நாத் யாத்திரை 15 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது கிடையாது. யாத்திரை தொடங்கி சில நாட்கள் கழித்து திடீரென தீவிரவாத தாக்குதல் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மாநிலத்தில் எவ்வித தீவிரவாத தாக்குதலும் நடைபெறவில்லை.
தற்போது நடப்பவற்றைக் காணும் போது கடந்த 1990 ஆம் வருடம் பாஜக ஆதரவு பெற்ற அப்போதைய வி பி சிங் ஆட்சியில் காஷ்மீரி பண்டிட்டுகள் இரவோடு இரவாக விரட்டப்பட்டது நினைவுக்கு வருகிறது. இப்போது பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. எனவே பாராளுமன்றத்தில் காஷ்மீர் நிலை குறித்த அறிக்கையைப் பிரதமர் மோடி அளிக்க வேண்டும். மேலும் 370 விதியை ரத்து செய்வதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால் பல சட்டப் பிரச்சினைகளை அரசு எதிர் கொள்ள நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் உடன் இருந்த காஷ்மீர் அரச பரம்பரையைச் சார்ந்த கரண் சிங், “அரசு தற்போது மாநில மக்களிடையே பயத்தையும் பீதியையும் பரப்பி வருகிறது. இங்குள்ள அனைவரும் அரசின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாநிலத்தில் என்ன நடக்குமோ என்னும் அச்சத்துடன் மக்கள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார். இதே கருத்தை முன்னாள் அமைச்சர்கள் சிதம்பரம், ஆனந்த் சர்மா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.