டெல்லி: சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
லடாக் விவகாரம் காரணமாக, இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. அமைதி நிலவ இரு நாடுகளும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந் நிலையில் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்டவர்களின் சமூக வலைத்தள கணக்குகளை சீனா கண்காணிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை உளவு பார்ப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, நாட்டின் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது: நாட்டின் முக்கிய தலைவர்கள் மீது சீனாவின் உளவு நடவடிக்கை கவலை தருகிறது. இதை நாங்கள் கண்டிக்கிறோம். நாட்டின் நலன்களை பாதுகாக்க மத்திய அரசு மீண்டும் மீண்டும் தவறுவது ஏன்? என்று கூறி உள்ளார்.