ஐசிஐசிஐ வங்கிக்கு சாதகமாக சில விதிகளை செபி தலைவர் மதாபி பூரி புச் தளர்த்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அதற்காக 2017 முதல் 2024 வரை ஐசிஐசிஐ வங்கியில் இருந்து ரூ. 16 கோடியே 80 லட்சத்தை செபி தலைவர் வருமானமாக ஈட்டியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் பவன் கெஹரா, ஐசிஐசிஐ வங்கி மீது முறைகேடு தொடர்பாக பல்வேறு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் மதாபி பூரி புச் அந்த வங்கியில் இருந்து தொடர்ச்சியாக வருமானம் ஈட்டி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, அதானி நிறுவனத்துடன் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவருக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும் இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி பணம் கைமாறியுள்ளதாகவும் ஹிண்டன்பெர்க் 2.0 அறிக்கையில் வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கிக்கு சாதகமாக செயல்பட செபி தலைவர் மதாபி பூரி புச் பணம்பெற்றதாக காங்கிரஸ் கட்சி எழுப்பியுள்ள குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.