டெல்லி
ஆம் ஆத்மி கட்சியுடன் ஹரியானா, டெல்லி சட்டசபைத் தேர்தல்களில் கூட்டணி இல்லை என காங்கிரஸ் துணை பொதுச் செயளாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
தற்போதைய மக்களவைத் தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து போட்டியிட்ட போதும் பஞ்சாபில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. ஹரியானாவில் இந்த ஆண்டு இறுதியிலும், டெல்லிக்கு அடுத்த ஆண்டும் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,
“மாநிலத் தேர்தல்களுக்கு இந்தியா கூட்டணி பின்பற்றும் வியூகம் எதுவும் இல்லை. காங்கிரஸ் தலைவர்களும், மற்ற கூட்டணிக் கட்சிகளும் உடன்படும் மாநிலங்களில் இந்தியா கூட்டணி இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும். ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி இணைந்து போட்டியிடும். ஆனால், பஞ்சாபில் இந்தியா கூட்டணி இல்லை.
மக்களவைத் தேர்தலில் ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஓர் இடம் கொடுத்தோம். ஹரியானாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி இருக்காது. டெல்லியில் இந்தியா கூட்டணி சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இருக்காது என ஆம் ஆத்மி கட்சியே கூறியுள்ளது”
என்று தெரிவித்துள்ளார்.