கொல்கத்தா
போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களை மம்தா பானர்ஜி ஏமாற்றுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம் 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கில், சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவர்களின் பொதுக்குழு கூட்டத்தின்போது, அதில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை விவகாரத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும். அவர்களுக்கு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையிலான தண்டனை வழங்கப்பட வேண்டும். கொல்கத்தா காவல் ஆணையாளர் கோயல், அவருடைய பதவியில் இருந்து விலக வேண்டும் உள்ளிட்டவை தீர்மானங்களில் கூறப்பட்டு இருந்தன.
அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாத சூழலில் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவது என டாக்டர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில், சால்ட் லேக் பகுதியில் அமைந்த மாநில சுகாதார துறையின் தலைமையகம், ஸ்வத்ய பவனுக்கு வெளியே டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6-வது நாளாக நேற்றிரவும் போராட்டம் தொடர்ந்தது.
டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு வரும்படி முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்த நிலையில், பேச்சுவார்த்தையை நேரலை செய்ய வேண்டும் என டாக்டர்கள் விடுத்த கோரிக்கையை அரசு ஏற்று கொள்ளவில்லை. எனவே முதல்வரை சந்திக்க மருத்துவர்கள் மறுத்து விட்டனர்.
மம்தா பானர்ஜி,
“நேரில் சந்திக்க வேண்டும் என கேட்டீர்கள். உங்களுக்காக நான் காத்திருக்கிறேன். ஆனால், பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்கவில்லை எனில், எதற்காக வந்தீர்கள்?. இதுபோன்று எனக்கு அவமதிப்பு உண்டாக்காதீர்கள். மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று கொள்வது என்பது சாத்தியமில்லாதது”
என்று கூறினார்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம்,
“போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்கும் தைரியம் மம்தா பானர்ஜிக்கு இல்லை. அதனை தந்திரத்துடன் கையாண்டு ஏமாற்ற பார்த்திருக்கிறார். ஆனால், அது வெற்றி பெறாது என கூறியிருக்கிறார். இது தீர்வு தராது என கூறிய அவர், அது சிக்கல்களையே உருவாக்கும். மம்தா பானர்ஜியின் தந்திரங்களை பற்றி நாம் நன்றாக அறிந்திருக்கிறோம்”
என்று கூறியுள்ளார்.