மும்பை

முந்த்ரா துறைமுகத்தில் போதைப் பொருள் பிடிபட்டதைத் திசை திருப்பச் சொகுசுக் கப்பலில் சோதனை நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சென்ற மாதம் குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் சுமார் 3000 கிலோ எடையுள்ள ஹெராயின் என்னும் போதை மருந்து பிடிபட்டுள்ளது.  சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ..21000 கோடி ஆகும்.   இந்த துறைமுகம் பாஜக அரசுக்கு  வேண்டப்பட்டவரான அதானியின் கட்டுப்பாட்டில் உள்ளது.   எனவே இது நாடெங்கும் கடும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

நேற்று முன் தினம் மும்பையில் ஒரு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.  அப்போது அந்த கப்பலில் நடந்த போதை விருந்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.  அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   இந்த விவகாரமும் நாட்டில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது, “பிரபல இந்தி நடிகரின் மகன் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. திடீரென போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் வந்து கப்பலில் போதைப் பொருளைப் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது..

ஆனால் அவர்கள் உண்மையான பிரச்சினையைத் திசை திருப்புகின்றனர். முந்த்ரா துறைமுக போதை பொருள் உண்மை பிரச்சினை ஆகும். ஆப்கானிஸ்தானில் இருந்து அந்த போதைப் பொருள் கடத்தப்பட்டது.  இதை ஊடகத்தினர் ஒளிபரப்பலாம் எனப் போதை தடுப்பு பிரிவு இங்கும், அங்கும் சிலரைப் பிடிக்கின்றனர்.

ஊடகவியலர்களே,  நீங்கள் முந்த்ரா துறைமுகம் பற்றி பயமின்றி எழுதுங்கள்.  குஜராத் மாநிலம் முந்த்ராவில் அதிகளவில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அமைதி காப்பது ஏன்? எனக் கேளுங்கள்” எனக் கூறி உள்ளார்.