டெல்லி

காங்கிரஸ் கட்சி தங்களுக்கு துணை சபாநாயகர் பதவியை ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளை தொடங்கும்  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முதல் நாளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று  பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆகஸ்ட் 12-ம் தேதி வரை இக்கூட்டத்தொடர் நடைபெறும்.

கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் ஒரு தலைவரை துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்க முயற்சி செய்கின்றன. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் ஏற்கவில்லை. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.  மேலும் நீட் வினாத்தாள் கசிவு, ரெயில்வே பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களும் இந்த கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை தொடங்க உள்ள மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்காக டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாதுகாப்புத்துறை ஆஇச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். இரு அவைகளும் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கேட்டுக் கொண்டார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைசர் கிரண் ரிஜிஜு,னைத்துக் கட்சி கூட்டத்தில் 44 கட்சிகளைச் சேர்ந்த 55 தலைவர்கள் பங்கேற்றதாகவும், கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனை பயனுள்ள வகையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

‘நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டுப் பொறுப்பு ஆகும். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்டு விவாதிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது’ என்றும் கிரண் ரிஜிஜு கூறினார்.