டெல்லி

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கூறி உள்ளது.

நேற்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில்,  உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியில் இருந்து விலகுவதாக  தெரிவித்துள்ளார்.  இது அரசியல் களத்தில் பேரதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் எக்ஸ் வலைதளத்தில்,

”துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவைத் தலைவரின் திடீர் ராஜினாமா புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அதிர்ச்சியளிக்கிறது. இன்று (நேற்று) மாலை சுமார் 5 மணி வரை நான் அவருடன் பல எம்.பி.க்களுடன் இருந்தேன், இரவு 7:30 மணிக்கு தொலைபேசியில் அவருடன் பேசினேன்.

சந்தேகத்திற்கு இடமின்றி, தன்கர் தனது உடல்நிலைக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால், அவரது முற்றிலும் எதிர்பாராத ராஜினாமாவில் கண்ணுக்குத் தெரிவதை விட அதிகமான விஷயங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது. இருப்பினும், இது ஊகங்களுக்கு ஏற்ற நேரம் அல்ல. தன்கர் அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் சமமாக விமர்சித்தார். நாளை (இன்று) மதியம் 1 மணிக்கு அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தை அவர் ஏற்பாடு செய்திருந்தார். நாளை (இன்று ) நீதித்துறை தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட இருந்தார்.

அவர் நலம் பெற வாழ்த்துகிறோம், ஆனால் அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். பிரதமர், ஜெகதீப் தங்கரை அவரது மனதை மாற்றச் செய்வார் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது நாட்டின் நலனுக்காக இருக்கும். குறிப்பாக விவசாய சமூகம் பெரிதும் நிம்மதியடையும்.”

என்று பதிவிட்டுள்ளார்.