டெல்லி:

‘‘பொருளாதாரத்தின் உண்மையான நிலைமை’’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 
இந்த வெள்ளை அறிக்கையை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார். ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக பொறுப்புள்ள எதிர்கட்சியாக காங்கிரஸ் இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு வருகிறது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், எம்பி ராஜீவ் கவுடா ஆகியோரது மேற்பார்வையில் தயாரான இந்த வெள்ளை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில்… ‘‘நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதை பாதுகாப்பாகவும், ஞானத்துடனும் கையாள வேண்டும். ஆண்டிற்கு ஒரு கோடி வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ஆனால, 2016ம் ஆண்டில் 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள் ம்டடுமே உருவாக்கப்பட்டது என்று மத்திய தொழிலாளர் நலத் துறையே ஒப்புக் கொண்டுள்ளது. 11 லட்சம் வேலைவாய்ப்புக்கள் 2011ம் ஆண்டிலும், 4.2 லட்சம் வேலைவாய்ப்புகள் 2014ம் ஆண்டிலும் உருவாக்கப்பட்டது’’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ‘‘தற்போதைய அரசு கொடூரமான சித்திரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு உதாரணம் சில…500 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளுக்கு மோடி கையெழுத்திட்டுள்ளார். இது நாட்டின் மொத்த உற்பத்தியை 20 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால்,நேரடி வெளிநாட்டு முதலீடு மற்றும் தனியார் முதலீடு ஆகிய இரண்டும் தோல்வியடைந்துள்ளது’’ என் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘‘மத்திய புள்ளியல் துறை தகவல்களின் அடிப்படையில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டின் பொருளாதாரம் தற்போது மொத்த வைப்பு மூலதனத்தில் சுருங்கி காட்சியளிக்கிறது. நாட்டின் பொதுத் துறைகளின் நிகர நிலையான சொத்துக்கள் மற்றும் அவர்களின் சம்பள பட்டியல் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு ‘‘நாட்டில் விவசாய உற்பத்தி சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் கோதுமை உற்பத்தி அதிகரித்திருப்பதாக மூடி மறைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கோதுமை இறக்குமதிக்கான 25 சதவீத வரியை முற்றிலும் ரத்து செய்து 2 முதல் 3 மில்லியன் டன் கோதுமையை இறக்குமதி செய்துவிட்டு, உற்பத்தி செய்ததாக மத்திய அரசு கணக்கு காட்ட முயற்சிக்கிறது.
பணமதிப்பிழப்பு அறிவிப்பு கிராமப் புறத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நூறு நாள வேலை திட்டத்தை செயல்படுத்த கூட போதுமான நிதி இல்லை. இந்த திட்டத்தில் 2015&16ம் நிதியாண்டில் முதல் 50 நாட்களில் 2.27 கோடி பேர் வேலை கேட்டும், 1.1 கோடி பேருக்கு மட்டுமே வேலை அளிக்கப்பட்டுள்ளது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘இந்த அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. அதே சமயம் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோர் தோற்றுப்போன பொருளாதார மேதைகள் என்பதை காட்டுகிறது’’ என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விமர்சனம் செய்துள்ளார்.